'வெற்றி பெற்றே ஆக வேண்டும்'; கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் திடீர் மாற்றம்: நடந்து என்ன..?
Coimbatore City District DMK Secretary Change
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் நீக்கப்பட்டு, தீர்மானக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்ட செயலாளராக, துரை செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக, பலவீனமாக இருக்கும் தொகுதிகளை அடையாளம் கண்டு, சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கடந்த முறை திமுக கோவை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்தது. அதனை செய்யும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
கோவை மாநகர் மாவட்டத்தில் திமுக வெற்றி பெற வேண்டுமெனில், கட்சியினரின் அதிருப்திக்கு ஆளான மாவட்ட செயலாளரை மாற்றினால் மட்டுமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

அதன் படி, கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு, பெயரளவுக்கு தீர்மானக்குழு செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளராக பீளமேடு பகுதி திமுக செயலாளராக இருக்கும் துரை செந்தமிழ் செல்வன், நியமிக்கப்பட்டுள்ளார்.
2016-ஆம் ஆண்டு சிங்காநல்லுார் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கார்த்திக், 2021-ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனினும், மாவட்ட செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்து வந்தார். மேலும், மாநகராட்சி தேர்தலின் போது, தனக்கு ஆகாதவர்களுக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டதாக, கார்த்திக் மீது முன்னணி நிர்வாகிகள் குற்றம் சாட்டி இருந்தனர்.

அத்துடன், அவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவினருடன் ஒட்டி உறவாடியதாகவும், அதன் மூலம் பயன்பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது கோவையில் வெற்றிப் பெற வேண்டுமென தலைமையின் முடிவால், பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்போதும் அவரது மனைவி தான், மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவராக பதவியில் உள்ளார். அவருக்கு, மேயர் பதவி பெறுவதற்கு கார்த்திக் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Coimbatore City District DMK Secretary Change