கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது...! தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது ஏன்...? - திருமாவளவன் ஓபன் டாக்...!
Coalition rule inevitable Why did VKC join Tvk cabinet Thirumavalavan Open Talk
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,“விசிகவுக்கும் திமுகவுக்கும் இடையே நீண்டகால அரசியல் மற்றும் கொள்கை அடிப்படையிலான புரிதல் நிலவி வருகிறது.
விசிக எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணியில் எந்தவித பதவி பேராசையும் இல்லை. கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரே, அமைச்சரவையில் பங்கேற்பது குறித்தும் நிர்வாகிகள் கருத்து முன்வைத்தனர்.அமைச்சரவையில் இடம்பிடிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது தவெக தரப்பிலிருந்து அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு வந்தது. என்னை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் எண்ணம் எனக்கில்லை.எனினும், கட்சியின் எதிர்கால முன்னேற்றத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் அரசியல் பயணத்தில் இணைந்து செயல்பட்டு வந்த வன்னி அரசுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க தீர்மானித்தோம்.தேர்தலுக்கு முன்பாக என்னை குறிவைத்து பல்வேறு அரசியல் தூண்டுதல்கள் உருவாக்கப்பட்டபோதிலும், திமுக கூட்டணி சிதையக்கூடாது என்பதில் உறுதியுடன் செயல்பட்டேன்.
ஆனால் தேர்தலுக்கு பிறகு கூட்டணியை கட்டுப்படுத்தும் நிலை என்னிடம் இல்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த அரசியல் முடிவுகளை என்னால் தடுக்க முடியாது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இசைவை பெற்ற பின்னரே தவெகவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. நாங்கள் எடுத்த முடிவை மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எதிர்மறையாக அணுகவில்லை.
ஆரம்பத்தில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அதற்கு அப்பாற்பட்டு அமைச்சரவையில் இணைவது குறித்து கட்சியே முடிவெடுத்தது. கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவது எனது அரசியல் கடமை.மிகுந்த பொறுப்புணர்வுடனும் அரசியல் நிதானத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சில தரப்புகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அவற்றை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்களின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க முயல்வது திட்டமிட்ட அவதூறு அரசியலாகும். எங்களின் நேர்மையையும் அரசியல் பயணத்தையும் கேள்விக்குட்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.
அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது காலச்சூழலின் அவசியமாக உருவாகியுள்ளது. தற்போதைய அரசியல் நிலவரத்தில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கே அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர். அமைச்சரவையில் இணைந்தது தொடர்பாக இதற்கு மேல் கூறுவதற்கு எதுவும் இல்லை.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
Coalition rule inevitable Why did VKC join Tvk cabinet Thirumavalavan Open Talk