பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தைக் கைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிடுமாறு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (I.N.O.) அமைக்கும் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக, 17-6-2021 நாளன்று ஒன்றிய அரசுக்கு தான் வைத்த கோரிக்கையை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனது கோரிக்கை, வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்திடவும், சுற்றுச்சூழல் அமைப்புக்கு மீள சரிசெய்ய இயலாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள இடம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மதிகெட்டான்-பெரியார் புலிகள் வழித்தட எல்லைக்குள் வருகிறது என்றும், நியூட்ரினோ ஆய்வகத் திட்ட நடவடிக்கைகள், இப்பகுதியிலுள்ள வன உயிரினங்களின் மரபணு வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) 27.11.2017 அன்று, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவை பரிசீலிக்கும் போது கீழ்க்காணும் இரண்டு முக்கிய விஷயங்களை சுட்டிகாட்டியுள்ளது.

1. இத்திட்டத்திற்காக சுரங்கம் தோண்டப்படும்போது அதிக அளவிலான கடின பாறைகளை உடைப்பதற்காக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் சுரங்கம் தோண்டும் போது 6,00,000 கன மீட்டர் அளவிலான சர்னோகைட் பாறைகள் உடைக்கப்பட்டு மலையிலிருந்து மண் வெளியேற்றப்பட வேண்டும்.

2. மலை உச்சியிலிருந்து 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் போது மலைப்பாறை மிகப் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும். மேலும், பாறையின் செங்குத்து அழுத்தம் ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவிற்கும் அதிகமாக இருக்கும். இதனால் பாறை வெடிப்பு மற்றும் கூரை சரிவுகள் ஏற்பட வழிவகுத்திடும். இத்திட்டத்தினை பாதுகாப்பாக செயல்படுத்த புவியியல் தொழில்நுட்ப ஆய்வுகளைப் பயன்படுத்தி முன்மொழிவுகள் ஆராயப்பட வேண்டும்.

எனவே தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) இந்த விவரங்களை வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்குத் தெரிவித்தது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ ஆய்வகத்தினை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதி, மதிகெட்டான் சோல தேசிய பூங்காவிலிருந்து 4.9 கி.மீ. தொலைவிலும், தென் மேற்கு தொடர்ச்சி மலையான போடி மலை காப்பு காட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலை உலகளாவிய பல்லுயிர் மையமாகவம், உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் மையமாகவும் விளங்குகிறது எனத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் இவ்விடத்திற்கு கிழக்குப் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துடன் தொடர்புடையதாக உள்ளது என்றும், இங்கு புலிகளுடன் ஏனைய விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் வசித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்
மேலும், இப்பகுதி முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான சம்பை, கொட்டகொடி பகுதிகளை உள்ளடக்கியதாகவும், போடி மலைப்பகுதியில் உள்ள சிறிய ஓடைகள் கொட்டக்குடி ஆற்றில் இணைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இது வைகை அணையில் கலக்கும் முன் பெரியாற்றில் கலக்கிறது என்றும் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான தண்ணீர் வழங்குவதுடன் மக்களின் வாழ்வதாரத்துக்கு அடிப்படையாக இந்த நீர்பிடிப்பு பகுதி உள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 27-9-2021 அன்று தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர்கள் குழு ஒன்று மாண்புமிகு ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களை சந்தித்து, இந்தத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தினைக் கைவிட கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு, தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதைக் கைவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு தாம் மீண்டும் கேட்டுக் கொள்வதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin letter to pm modi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->