இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!
Chief Minister Vijay writes to the Central Government urging appropriate action regarding the issue of Tamil Nadu fishermen
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின்மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த திருவாளர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.05.2026 அன்று நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களை சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் ஏற்கெனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன்.
எனவே, இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Chief Minister Vijay writes to the Central Government urging appropriate action regarding the issue of Tamil Nadu fishermen