“முதல்வர் விஜய் நேரில் வர வேண்டும்”! பேச்சுவார்த்தைக்கு போன லயோலா மணியிடம் சரமாரி கேள்வி கேட்ட தூய்மைப் பணியாளர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், முதல்வர் விஜய் நேரில் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து ரிப்பன் மாளிகை முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே போராட்டம் நடைபெற்ற பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள், அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்றும், தேவைப்பட்டால் 100 நாட்கள் ஆனாலும் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், முதல்வர் விஜய் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் தண்டையார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “உங்களுக்கு போராடுவதற்கான இடம் மற்றும் தேவையான வசதிகள் செய்து தரப்படும். உங்களில் ஒருவனாக உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்வதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், லயோலா மணி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே தூய்மைப் பணியாளர்கள் அவரைச் சுற்றி வளைத்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

“முதல்வர் விஜய் இங்கே வர வேண்டும். நாங்கள் வேலைதானே கேட்கிறோம். மீண்டும் எங்களை போராட்டத்தில் இறக்கிவிட்டார்கள். எங்களுக்கு இது நம்பிக்கை இல்லாத வாழ்க்கையாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்து போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையடுத்து லயோலா மணி, “ஒத்துழைப்பு கொடுங்கள். நாளை முறையான அனுமதியுடன் ரிப்பன் மாளிகையில் நீங்கள் போராடுவதற்கான சூழலை உறுதியாக உருவாக்கித் தருகிறோம்” என தெரிவித்தார்.

ஆனால், தங்களது முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் தொடர்பாக முதல்வர் விஜய் நேரடியாக தங்களை சந்தித்து உறுதியான தீர்வு வழங்க வேண்டும் என்பதில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay must come in person Sanitation workers fired a barrage of questions at Loyola Mani who had arrived for talks


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->