ஜூன் 11-ல் மீண்டும் டெல்லி பறக்கிறார் முதல்வர் விஜய்...! பிரதமரை சந்திக்கிறாரா...? - அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு...!
Chief Minister Vijay flying Delhi again June 11 Will he meet Prime Minister Great expectations political circles
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் தலைநகர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த மாதம் 27-ஆம் தேதி விஜய் டெல்லி சென்று பல்வேறு முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார். அந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் மாநில நலன் சார்ந்த விவகாரங்களை எடுத்துரைத்தார்.

குறிப்பாக, கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதரவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
அந்த டெல்லி பயணத்தின் போது, கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. இருப்பினும், அந்த சந்திப்பு நடைபெறாமல் அவர் சென்னை திரும்பியிருந்தார்.
இந்நிலையில், மாநிலங்களின் வளர்ச்சி முன்னுரிமைகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 11-ஆம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களுடனும் அவர் சந்திப்பு நடத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சரின் இந்த இரண்டாவது டெல்லி பயணம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
English Summary
Chief Minister Vijay flying Delhi again June 11 Will he meet Prime Minister Great expectations political circles