'இந்த முறை சென்னை மூழ்கக் கூடாது'...! - வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் என்.ஆனந்த் ‘கெடு’ விதிப்பு...!
Chennai should not sink this time Minister N Anand orders Kedu complete flood prevention works quickly
தமிழ்நாட்டின் நீர்வள வளங்களை பாதுகாத்து, வேளாண்மை மற்றும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வளத் துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.

குறிப்பாக, ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பாசனக் கட்டமைப்புகள், பழமையான பாசன அமைப்புகளை புதுப்பிக்கும் பணிகள், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகள், வெள்ளத் தடுப்பு மற்றும் வெள்ள பாதிப்பு குறைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அணைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோர பகுதிகளில் கடல் அரிப்பை கட்டுப்படுத்தும் திட்டங்கள், நீர்நிலைகள் சீரமைப்பு, புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் வெள்ளப் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களும் கூட்டத்தில் முக்கிய இடம் பெற்றன. முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகளின் செயல்பாட்டு நிலை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தினார்.மேலும், திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால், அவற்றை உடனடியாக விசாரித்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் துறையின் முதன்மை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு முதன்மை செயலாளர் முனைவர் சத்திய பிரத சாகு, அரசு சிறப்பு செயலாளர் சு. ஸ்ரீதரன், முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், மண்டல தலைமைப் பொறியாளர்கள், செயல்பாட்டு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
நீர்வள பாதுகாப்பு, வெள்ள மேலாண்மை மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், மாநிலத்தின் நீண்டகால நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Chennai should not sink this time Minister N Anand orders Kedu complete flood prevention works quickly