அடுத்தடுத்து 4 சம்பவங்கள்... தமிழ்நாட்டில் அரசாங்கமும், காவல்துறையும் இருக்கிறதா? அதிமுக கொந்தளிப்பு!
chennai sanitation worker Chennai police Arrest
சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூய்மைப் பணியாளரிடம் ஒரு இளைஞர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அத்துமீறலைக் கண்டு கோபமடைந்த அந்தப் பெண் தூய்மைப் பணியாளர், சிறிதும் தயங்காமல் அந்த இளைஞரைத் தான் வைத்திருந்த துடைப்பத்தால் கடுமையாக அடித்து விரட்டினார். இதனால் நிலைகுலைந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாக இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கினர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு, அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த இளைஞர் ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பதை போலீசார் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தனர். மாநகராட்சிப் பெண் தூய்மைப் பணியாளரிடம் அத்துமீறிய இளைஞர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசாங்கமும் காவல்துறையும் இருக்கிறதா?
ஒரு தூய்மைப் பணியாளருக்கு நள்ளிரவு மூன்று மணிக்கு, சென்னையின் முக்கிய சாலையில் அரங்கேறிய அசிங்கமும்,
திண்டிவனத்தில் பள்ளி மாணவி ஒருவர் காவலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட கொடூரமும்,
சென்னையில் திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்ய சென்ற காவலர் கொள்ளை கும்பலால் தாக்கப்படுவதும்,
நாகர்கோவிலில் பயிற்சி செவிலியர் மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும்,
இவையெல்லாம் உணர்த்தும் கேள்வி ஒன்று தான். தமிழ்நாட்டில் அரசாங்கமும், காவல்துறையும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
chennai sanitation worker Chennai police Arrest