'பெண்களுக்கெதிரான தி.மு.க. ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும் - கொந்தளிக்கும் நயினார்!
BJP Nainar Nagendran condemn to DMK MK Stalin
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. கொலையான மாணவியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் இன்று எந்தப் பெண்ணுக்கு எங்கே வன்கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்திலேயே செய்தித்தாள்களைப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறி பாஜக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தன் வாரிசுகளை மட்டுமே உயர்ந்ததாக நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து பலிகொடுக்கத் தயாராகிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது! திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Nainar Nagendran condemn to DMK MK Stalin