ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
BSP Armstrong murder case cbi Supreme Court order
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தபோது இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரங்கள்
கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரவுடிகள் நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 27 பேரைக் கைது செய்தனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார், நாகேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் (அக்டோபர்) 24-ஆம் தேதி உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் கருத்து
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று தமிழக அரசு வாதம் முன்வைத்தது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது. மேலும், "ஒவ்வொரு வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோருவதை ஏற்க முடியாது" என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
English Summary
BSP Armstrong murder case cbi Supreme Court order