பாஜக கோவை மீது சிறப்பு கவனம்; 3 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக – அண்ணாமலை போட்டியிடும் சட்டசபை தொகுதி எது?
BJP focuses on Coimbatore BJP targets 3 constituencies Which assembly constituency will Annamalai contest
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், பாஜக கோவை மாவட்டத்தை முக்கிய அரசியல் மையமாகக் கொண்டு, அங்கு உள்ள 3 சட்டசபைத் தொகுதிகளை குறிவைத்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையையும் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ள நிலையில், இரு கட்சிகளும் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணிக்குள் இன்னும் சில கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இந்த பின்னணியில், சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திருச்சியில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைகளின் தொடர்ச்சியாக, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கோவைக்கு வந்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் ஒரு பகுதியாகவே, பாஜக கோவை மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபைத் தொகுதிகளை முக்கியமாகக் கருதி, அங்கு முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, கோவையில் வலுவான அடையாளம் கொண்ட அண்ணாமலையை மாவட்டத்திலேயே உள்ள ஒரு தொகுதியில் களமிறக்கலாம் என்ற யோசனை மேலிடத்தில் பரிசீலனையில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் கோவை மாவட்டம் முக்கிய களமாக மாறி வரும் நிலையில், அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார், பாஜகவுக்கு கோவையில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படப் போகின்றன என்பது குறித்து அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
BJP focuses on Coimbatore BJP targets 3 constituencies Which assembly constituency will Annamalai contest