அதிமுக கூட்டணியில் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்!
BJP asking for 57 seats in AIADMK alliance 57 in charges will come Information given by PL Santosh
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான ஒரு பகுதியாக, தமிழகத்தில் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய வெளி மாநிலங்களைச் சேர்ந்த 57 பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கை குறித்து பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை சட்டசபையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்ற இலக்குடன் கட்சி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்து, அதன் விவரங்களை கட்சியின் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பும் வகையில் 57 வெளிமாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக பாஜக மேற்கொண்ட ஆய்வில், கட்சிக்கு சாதகமாக இருக்கக்கூடிய 75 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் இருந்து 57 தொகுதிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 57 தொகுதிகளிலும் நியமிக்கப்படும் வெளிமாநில பொறுப்பாளர்கள் தேர்தல் முடியும் வரை அங்கு முகாமிட்டு பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும்
-
வாக்குச்சாவடி நிலவரத்தை ஆய்வு செய்வது
-
பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது
-
கமிட்டி இல்லாத இடங்களில் புதிய அமைப்புகளை உருவாக்குவது
-
வாக்குச்சாவடி வாரியான பலவீனங்கள் மற்றும் பலங்களை மதிப்பீடு செய்வது
போன்ற பணிகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை நேரடியாக மேலிடத்திற்கு அனுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் 57 தொகுதிகளை பாஜக கோரக்கூடும் என்ற அரசியல் கணிப்புகளும் வெளிவந்துள்ளன. மேலும் அந்த தொகுதிகளில் இருந்து அமமுக, ஐஜேகே போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் சில இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் பி.எல். சந்தோஷ், நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் விரைவுபெறக்கூடும் என்றும், தேர்தல் கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
English Summary
BJP asking for 57 seats in AIADMK alliance 57 in charges will come Information given by PL Santosh