த.வெ.க நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க பரபரப்பு புகார்!
BJP Alleges Rule Violation in TVK Star Campaigners List Karate Thiagarajan Files Complaint with Election Commission
தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வ புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள த.வெ.க-வின் 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், அக்காட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யுடன் சேர்த்து, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி ரவிக்குமார், வன்னி அரசு, சிந்தனை செல்வன், ம.தி.மு.க-வின் வைகோ, துரை வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் போன்ற பிற அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77-ன் படி, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் சொந்த உறுப்பினர்களை மட்டுமே நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது தெளிவான விதியாகும். ஆனால், இந்த விதியை முற்றிலும் புறக்கணித்து, பிற கட்சித் தலைவர்கள் அடங்கிய பட்டியலைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது தேர்தல் நடத்தை விதிகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியிலும் இதே போன்ற சூழல் எழுந்தபோது, கட்சியின் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திரப் பேச்சாளராக நியமிக்க முடியாது என்ற நடைமுறை உறுதி செய்யப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். எனவே, ஆளுங்கட்சியான த.வெ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற தோற்றத்தைத் தவிர்க்கும் வகையில், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள த.வெ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Alleges Rule Violation in TVK Star Campaigners List Karate Thiagarajan Files Complaint with Election Commission