பீகார் தேர்தல்: 11 மணிவரை பதிவான 27.7 சதவீத வாக்குகள்!
Bihar Election 2025
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,374 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதில் 119 அரசியல் கட்சிகள் 851 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளன; மேலும் 463 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். பெண் வேட்பாளர்கள் 122 பேரும் தேர்தல் களத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்கிறார்கள்.
இவர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க 3.75 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். அதில் ஆண்கள் 1.98 கோடி, பெண்கள் 1.76 கோடி. 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் ஆகும்; இதில் 18 முதல் 19 வயதுக்குள் உள்ள முதல்முறை வாக்காளர்கள் 7.38 லட்சம் பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வாக்காளர்கள் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கினர்.
காலை 11 மணி நிலவரப்படி, 121 தொகுதிகளில் சராசரியாக 27.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு மாலை வரை நடைபெறவுள்ளது.