பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி: இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு - தேர்தல் ஆணையம்!
Bihar assembly Election Commission of India
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்–பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தயாரிப்புகளை மதிப்பீடு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த இரண்டு நாட்களாக பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில், பீகார் சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்படுகின்றன.
முன்னதாக, 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10 அன்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இந்த முறை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளன. சில கட்சிகள் இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டுமென பரிந்துரைத்துள்ளன. எனவே, எத்தனை கட்டங்களில் தேர்தல் நடைபெறும் என்பது குறித்து ஆவல் நிலவுகிறது.
தேர்தல் களம் - மும்முனை போட்டி: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்–பா.ஜ.க. கூட்டணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதேசமயம், லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் அரங்கில் தங்கள் பங்கினை வலுப்படுத்தத் தயாராக உள்ளன. எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
English Summary
Bihar assembly Election Commission of India