கொளத்தூர் EVM ஆய்வு நிறைவு! "எந்த முரண்பாடும் இல்லை"!கொளத்தூரில் பாபு வென்றது வென்றதுதான்! டாட் வைத்த தேர்தல் ஆணையம்!
Babu victory in Kolathur stands firm The Election Commission has settled the matter decisively
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) குறித்து திமுக எழுப்பிய சந்தேகங்களுக்கு மத்தியில், ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், எந்தவித முரண்பாடும் கண்டறியப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ். பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்ற சந்தேகத்தை முன்வைத்து, அவற்றை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் கடந்த 29-ஆம் தேதி முதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு எட்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஆய்வின் போது சில இயந்திரங்களில் சீல்கள் மற்றும் டேக் தொடர்பாக திமுக தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஐந்து இயந்திரங்களில் பிரச்சினை இருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் திமுக தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் பொறியாளர்கள், அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் 14 வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்களை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மற்றும் வி.வி.பேட் (VVPAT) சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில் எந்தவித முரண்பாடும் இல்லை; அனைத்து இயந்திரங்களும் முறையாக செயல்பட்டன என்பது உறுதி செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஆய்வின் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தால், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Babu victory in Kolathur stands firm The Election Commission has settled the matter decisively