கரூரில் திமுக முப்பெரும் விழா: கனிமொழி உள்ளிட்ட 06 பேருக்கு விருதுகள் அறிவிப்பு..!
Awards announced for 6 people including Kanimozhi at DMKs grand function in Karur
எதிர்வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கரூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதன் போது கனிமொழி எம்பி உள்ளிட்ட 06 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுகவின் தொடக்க நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாகின்றனர். அதன்படி, அடுத்த மாதம் 17-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கரூரில் நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

''2025ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது திமுக துணைப் பொதுச்செயலாளரும்- திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது.
அண்ணா விருது- தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும்-பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமன், கலைஞர் விருது-நூற்றாண்டு கண்டவரும்-அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும்- அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரன், பாவேந்தர் விருது- திமுக மூத்த முன்னோடியும்- தலைமைச் செயற்குழு உறுப்பினரும்-குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது- திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும்-காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும்-சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் இராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது-ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும்-முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் வழங்கப்படும்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Awards announced for 6 people including Kanimozhi at DMKs grand function in Karur