ஈரான் உச்ச தலைவர் படுகொலை… மௌனத்தில் மோடி அரசு...? - சோனியா காந்தி கடும் கண்டனம்
Assassination Iran Supreme Leader Modi government silence Sonia Gandhi strongly condemns
அணுசக்தி போட்டியை மையமாகக் கொண்டு ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றக் களமாக மாறியுள்ளது.

டெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலின் போது, ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், போர் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த சம்பவம் உலக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் எழுதிய தலையங்கத்தில், “ஈரான் உச்ச தலைவர் படுகொலை செய்யப்பட்டதை இந்தியா அரசு கண்டிக்காமல் இருப்பது தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகுவது போன்றது” என்று சாடியுள்ளார்.
மேலும், “பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் ஒரு நாட்டின் தலைவரை கொல்லுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயல். ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கோட்பாட்டை முன்வைக்கும் இந்தியா, இவ்வாறான இக்கட்டான தருணங்களில் மௌனம் காக்கக் கூடாது. அது நாட்டின் சர்வதேச நம்பகத்தன்மையை பாதிக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 1994-ல் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச மேடையில் எடுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தபோது, ஐநாவில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் வழங்கிய பங்களிப்பை நினைவூட்டிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் பேணப்பட்ட வலுவான ராஜதந்திர உறவுகளை தற்போதைய பாரதிய ஜனதா கட்சி அரசு புறக்கணித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
English Summary
Assassination Iran Supreme Leader Modi government silence Sonia Gandhi strongly condemns