கிராமங்களின் ஆணிவேர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? - கடிதம் மூலம் ஓபிஎஸ் குரல்
Are very foundations villages being neglected OPS raises his voice through letter
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கிராம உதவியாளர்களின் பங்களிப்பையும், அவர்களது வாழ்வாதார சிக்கல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பேரிடர் காலங்களில் தன்னலமின்றி பணியாற்றுவது, நில விவரங்கள், பயிர் நிலை, நிலவரி, பிறப்பு–இறப்பு பதிவுகள், முதியோர் ஓய்வூதிய விவரங்கள் உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது என கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக கிராம உதவியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இத்தனை முக்கியப் பணிகளைச் செய்தாலும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே வேதனையான உண்மை. காலமுறை ஊதியம் கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் நிலைக்கே கிராம உதவியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் அலுவலகப் பணி, களப்பணி, தேர்தல் பணி என இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். வருவாய்த் துறையில் பணியாற்றும் இரவுக் காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் அனைவரும் காலமுறை ஊதியம் பெறும் நிலையில், கிராம உதவியாளர்கள் மட்டும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் வைத்திருப்பது ஒருதலைபட்சமான நடைமுறை என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.
இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகள் இவர்களுக்கு கிடைக்காமல் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
கிராம உதவியாளர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிக வேலைச்சுமை, குறைந்த ஊதியம் என்ற நிலை நீடிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.எனவே, கிராமங்களின் ஆணிவேர்களாக விளங்கும் கிராம உதவியாளர்களின் பணி நிலைமையையும், அவர்களது கோரிக்கைகளின் நியாயத்தையும் கருத்தில் கொண்டு, உடனடியாக காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் சார்பில் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Are very foundations villages being neglected OPS raises his voice through letter