'மீண்டும் ஒரு தொகுதி மறுவரையறை மாயை'...! - மத்திய அரசின் சதுரங்க ஆட்டத்தை போட்டுடைத்த மாணிக்கம் தாகூர்...! - Seithipunal
Seithipunal


தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் புதிய முயற்சியை மேற்கொள்வதாக காங்கிரஸ் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மக்களவையில் இந்தியா கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த மசோதாவை, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்து மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், தொகுதி மறுவரையறை நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக செயல்பட்ட தமிழகத்திற்கு, தொகுதி மறுவரையறை மூலம் அரசியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, மக்கள்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்வது சமநீதிக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், உத்தரபிரதேசத்தின் மக்களவை தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழகத்தின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான தொகுதி எண்ணிக்கை வித்தியாசம் மேலும் அதிகரிக்கும் என்றும், மக்களவையில் எண்ணிக்கை அடிப்படையிலான முடிவுகள் முக்கியத்துவம் பெறும் நிலையில், தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு படிப்படியாக குறையக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்திற்கு நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களால் கிடைத்த பாதுகாப்பை நீக்குவதற்கான முயற்சியாகவே தற்போதைய நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறைவடைவதற்கு முன்பாக தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான அநீதியை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இன்று நடைபெறும் நடைபயணம், வெறும் விளக்க நிகழ்ச்சியாக அல்லாமல் தமிழகத்தின் அரசியல் உரிமைகள், ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் எதிர்கால தலைமுறையின் அரசியல் பங்கேற்பை பாதுகாப்பதற்கான உரிமைப் போராட்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சுயமரியாதை, அரசியல் உரிமைகள் மற்றும் மாநில நலன்களை எந்த நடவடிக்கையாலும் பறிக்க முடியாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், தொகுதி மறுவரையறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பாடலை உருவாக்கிய சலாம் மாஸ் உள்ளிட்டோரின் முயற்சிகளுக்கும் மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நலனையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another constituency redelineation illusion Manickam Thakur who played the central government chess game


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->