அண்ணாமலையின் ‘இது நம்ம இயக்கம்’: அரசியல் கட்சியாக எப்போது மாறும்? ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு! அமைதி காக்கும் அண்ணாமலை!
Annamalai Idhu Namma Iyakkam This Is Our Movement When will it transform into a political party
‘இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, அதனை எப்போது முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகிறது. இருப்பினும், தற்போதைக்கு புதிய கட்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்றும், முதலில் இயக்கத்தை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளார். தனது புதிய இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தல் களத்திலும் பங்கேற்கும் என்று அவர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்லியில் தனது முடிவை அறிவித்த பிறகு சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ‘இது நம்ம இயக்கம்’ மூலம் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டத்திலேயே லட்சக்கணக்கானோர் பதிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அண்ணாமலையின் இந்த முயற்சி வெறும் அமைப்பு தொடக்கம் மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாஜகவில் அவரை நம்பி இணைந்த இளைஞர்கள் மற்றும் பல நடுத்தர நிலை நிர்வாகிகள் தற்போது அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் தாக்கமாக, பாஜக நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து விலகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலையுடன் பணியாற்றிய நிர்வாகிகள் அவரது புதிய இயக்கத்தில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜக அமைப்பு ரீதியாக பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், பாஜக தரப்பு இந்த நிலையை வேறுவிதமாக பார்க்கிறது. அண்ணாமலைக்கு தனிப்பட்ட ஆதரவு கொண்ட சிலர் மட்டுமே வெளியேறுவதாகவும், கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்த அடிப்படையில் செயல்படும் தொண்டர்கள் தொடர்ந்து பாஜகவிலேயே இருப்பார்கள் என்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், அண்ணாமலைக்கு ஆதரவான சிலர் இன்னும் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் தொடர்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வெளிப்படையாக விலகாமல், எதிர்கால அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் கட்சிக்குள் இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
அண்ணாமலையின் அடுத்தகட்ட திட்டம் குறித்து வெளியாகும் தகவல்களின்படி, இன்னும் சில மாதங்கள் உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு கட்டமைப்பு மற்றும் மாவட்ட அளவிலான வலையமைப்பை உருவாக்கும் பணிகளிலேயே கவனம் செலுத்தப்பட உள்ளது. அதன் பின்னரே கட்சியின் பெயர், கொடி, கொள்கை, நிர்வாக அமைப்பு உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் முயற்சி தமிழக அரசியலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும், அவரது நகர்வு மாநில அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் இது திமுக, தவெக உள்ளிட்ட முக்கிய அரசியல் சக்திகளுக்கு மாற்றாக உருவெடுக்குமா என்பது அரசியல் சூழ்நிலைகளையும், அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் பொறுத்தே அமையும்.
English Summary
Annamalai Idhu Namma Iyakkam This Is Our Movement When will it transform into a political party