பாஜகவில் இருந்து விலகி தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, தனது "வி தி லீடர்ஸ்" (இது நம்ம இயக்கம்) அமைப்பின் முதல் மாநில மாநாட்டை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். "போதையில்லா தமிழகம் – விழிப்புணர்வு மாநாடு" என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பதை விட, தனது அரசியல் பயணத்தின் நோக்கம், கொள்கை மற்றும் எதிர்காலத் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டின் மூலம் தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதிய அரசியல் பாணியை உருவாக்க அண்ணாமலை முயற்சித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கரூரில் பிறந்த அண்ணாமலை, ஐஐஎம் கல்வியை முடித்த பின்னர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். விருப்ப ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக துணைத் தலைவராகவும், பின்னர் 2021-ஆம் ஆண்டு மாநிலத் தலைவராகவும் உயர்ந்தார்.
சட்டம்-ஒழுங்கு, ஊழல், நிர்வாகக் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த அண்ணாமலை, இளைஞர்கள் மத்தியில் தனித்துவமான ஆதரவைப் பெற்றார். பின்னர் அதிமுகவையும் விமர்சித்ததால், பாஜக-அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் புதிய கூட்டணியை அமைத்தாலும், அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாமலை பதவி விலகினார்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய அண்ணாமலை, அதே நாளில் "வி தி லீடர்ஸ்" அமைப்பைத் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்தார். தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அடிமட்டத் தொண்டர்களும் இந்த அமைப்பில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அரசியல் கட்சியை அறிவிப்பேன் என்று அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், அதற்கு முன்னதாகவே தனது அமைப்பின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.
இந்த மாநாடு முழுமையாக அரசியல் விமர்சனங்களை மையமாகக் கொண்டதாக இல்லாமல், சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய அண்ணாமலை,"இது அரசியல் எதிரிகளை விமர்சிக்க நடத்தப்படும் மாநாடு அல்ல. யாரையும் குறை கூறுவதற்காக நாம் கூடவில்லை. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம்"என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசை நேரடியாக தாக்காமல், புதிய அரசு என்பதால் ஆரம்பகட்டத்தில் சில தடுமாற்றங்கள் இயல்பானவை என்றும், விமர்சனங்களை விட நல்ல ஆலோசனைகளை வழங்குவதே ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை என்றும் குறிப்பிட்டார்.
மாநாட்டில் மதுபானக் கொள்கை குறித்தும் தனது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்த அண்ணாமலை, கோயில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு தெரிவித்தாலும், பல இடங்களில் விதிமுறைகள் மீறப்படுவதாக தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
அத்தகைய கடைகளையும் உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும்,"வெறுப்பை மையமாகக் கொண்ட அரசியல் வேண்டாம்; மக்களின் நலனை மையமாகக் கொண்ட அரசியல்தான் தேவை"என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியை விமர்சித்த அண்ணாமலை, அதிகாரத்தில் இருந்தபோது ஆணவ அரசியலை முன்னெடுத்ததால்தான் மக்கள் அந்த ஆட்சியை நிராகரித்ததாக கூறினார்.
ஆனால், பாஜக அல்லது பிரதமர் நரேந்திர மோடி குறித்து எந்த விமர்சனமும் முன்வைக்கவில்லை.
இதற்கு விளக்கம் அளித்த அவர்,"எங்கள் அமைப்பில் பாஜக மட்டுமல்ல, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளனர். ஒரு கட்சியை விட்டு வெளியேறும்போது அந்தக் கட்சியை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்"என்று கூறினார்.
தனது அரசியல் சிந்தனையை விளக்கிய அண்ணாமலை,"இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதே நேரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக உயர வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. மதமும் ஜாதியும் இந்த இயக்கத்தின் அரசியல் அடிப்படையாக இருக்காது. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்"என்று தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், அரசியலில் ஆர்வமுள்ள சாதாரண இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தலைவர்களாக உருவாக்குவதே தனது முக்கிய நோக்கம் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.
இதற்காக கோவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை தனது அமைப்பின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டாயம் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரிகளை நேரடியாக சுட்டிக்காட்டிய நிலையில், அண்ணாமலை தனது முதல் மாநில மாநாட்டில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்காமல், "அரவணைப்பு அரசியல்" என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2031-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை, சமூகப் பிரச்சினைகள், அரசியல் பயிற்சி, இளைஞர் தலைமையுருவாக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி மாற்று அரசியல் பாதையை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
இந்த அணுகுமுறை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்த அரசியல் முயற்சி எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது வரவிருக்கும் தேர்தல்களிலும், அவரது அமைப்பின் வளர்ச்சியிலும் வெளிப்படும் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.