அரசுக்கு அண்ணாமலை விடுத்த சவால்...! 'சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்'...? - காரசார அறிக்கை...!
Annamalai challenge government When you going control law and order situation bold statement
வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் சில குற்றச்சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்டு, வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பான தரவுகளை அரசு முறையாக பராமரித்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது,"திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் வெளிமாநில நபரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிலரின் தொடர்பு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜூன் மாதத்தில் சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம், கடந்த மாதம் தாம்பரம் பகுதியில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, திருவள்ளூர் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் நடைபெற்ற தாக்குதல் சம்பவம், வேளச்சேரி பகுதியில் பெண்களுக்கு எதிராக பதிவான பல்வேறு குற்ற வழக்குகள், மதுரவாயலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட பல வழக்குகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வரும் காவலர்களின் செயல்பாடு பாராட்டத்தக்கது. எனினும் குற்றங்கள் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, அவை நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், வெளிமாநிலங்களில் இருந்து பணிக்காக வருபவர்களின் முழுமையான விவரங்கள், அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த விவரங்கள் அரசுத் துறைகளுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் பணிபுரியும் இடங்கள், சொந்த மாநிலம், நிரந்தர முகவரி, தற்போதைய தங்குமிடம் உள்ளிட்ட முழுமையான தகவல்களை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அரசிடம் கட்டாயமாக பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், அந்த தகவல்களை தமிழக அரசு முறையாக பராமரித்து, தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Annamalai challenge government When you going control law and order situation bold statement