ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் - டிடிவி தினகரன்!
Ammk TTV Dinakaran condemn to DMK govt
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையினரின் சித்ரவதையால் கைதி உயிரிழப்பு எனப் புகார். கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்த அவரின் கண்டன அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
English Summary
Ammk TTV Dinakaran condemn to DMK govt