"மாற்றம்" கொண்டு வருவதாக முதலமைச்சர் விஜய் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? டிடிவி தினகரன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும்.

முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின் காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக அமையாது.

காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்குப் பிறகும் மீதமுள்ள தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தற்போதுள்ள பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய பயிர்க்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவுவதால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலை உருவாகி, விவசாய உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது.

மிக முக்கியமாக, தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் தள்ளுபடி வரம்பை சிறிது சிறிதாக உயர்த்துவது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை தொடருமானால், "மாற்றம்" கொண்டு வருவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மக்களின் நலனுக்காக ஆட்சி செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு கோரிக்கைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது.

எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK TTV Dhinakaran Condemn to tvk vijay Govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->