நெல்லை: ஒரே இடத்தில் 20 கல்குவாரிகளை அமைத்து கனிமவளக் கொள்ளை...
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt nellai kal quarry
அம்மா மக்கள் முன்னேற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திருநெல்வேலி அருகே ஒரே இடத்தில் 20 கல்குவாரிகளை அமைத்து கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் – கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசு அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் அடுத்தடுத்து செயல்படும் 20 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திற்கு வெடிவைத்துத் தகர்த்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கல்குவாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கடத்தும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதிகளின் விளைநிலங்களோடு, நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சட்டவிரோத குவாரிகளோடு, உரிமம் பெற்ற குவாரிகளிலிருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு நிர்வாகத்துறைகளோ, பல்வேறு புகார்கள் குவிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதன் மூலம், ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தனது பங்கிற்குக் கனிமவளக் கொள்ளையை ஊக்குவிக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தென் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இந்த 20 குவாரிகளில் உடனடி ஆய்வை மேற்கொண்டு கனிமவளம் கடத்தப்பட்டிருப்பது உறுதியானால் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt nellai kal quarry