சைலண்ட் மூடில் அமமுக! திணறும் தேமுதிக! ஓபிஎஸ் நிலைமை தான் ரொம்ப மோசம்! விஜய் எடுக்கப்போகும் முடிவு!
AMMK in silent mode DMDK is struggling The OPS situation is very bad Vijay decision to take
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் காத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வரிசையில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், தவெக தலைவர் விஜய் எடுக்கும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. இதுவரை வலுவாக இருந்த திமுக கூட்டணியில்கூட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சீட் மற்றும் அதிகாரப் பங்கு கோரிக்கைகளால் லேசான முட்டல் மோதல் ஆரம்பித்துள்ளது. மறுபுறம், அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைவார்கள் என்பது இன்னும் முழுமையாக தெளிவாகவில்லை.
இந்த சூழலில், ஒருகாலத்தில் தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக எடுக்கும் முடிவே அரசியல் சமநிலையை மாற்றக்கூடியதாக இருக்கும் என்பதால், அதன் கூட்டணி நிலைப்பாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த், “ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இன்னும் தங்கள் கூட்டணியை அறிவிக்காத போது, நாம் ஏன் அவசரம் காட்ட வேண்டும்?” என்று கூறி, நேரடி அறிவிப்பைத் தவிர்த்தார். இதனால் தேமுதிக எந்தப் பக்கம் செல்லப்போகிறது என்ற கேள்வி மேலும் வலுப்பெற்றது.
அதேபோல், ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமமுக – தவெக கூட்டணி உருவாகலாம் என்றும், அல்லது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக இணைக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் முரண்பட்ட கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
மற்றொரு புறம், தனித்த அரசியல் பாதையில் பயணித்து வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அண்மைக் காலமாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும், ஓபிஎஸ் எந்தக் கூட்டணியில் இணையப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதிமுகவில் மீண்டும் இடம் கிடைக்காத நிலையில், ஓபிஎஸ்ஸை தவெக தலைமையிலான கூட்டணியில் இணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில்தான், “தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தத்தில், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் தங்கள் அடுத்த கட்ட அரசியல் நகர்வை இப்போது வெளிப்படுத்தாமல், தவெக தலைவர் விஜய் எடுக்கும் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவே தெரிகிறது. “ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்” என்ற நிலையில் யாரையும் முழுமையாக ஏற்காமல், கடைசி நேரம் வரை காத்திருக்கும் இந்த அரசியல் யுக்தி, திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகளுக்கும் கூட்டணியை இறுதி செய்வதில் கூடுதல் சவாலாக மாறி வருகிறது.
English Summary
AMMK in silent mode DMDK is struggling The OPS situation is very bad Vijay decision to take