ஜனவரி 9ல் தமிழகம் வரும் அமித்ஷா.. அவசரமாய் பொதுக்குழுவை கூட்டும் அமமுக.. டிடிவி தினகரன் முடிவு என்ன?
Amit Shah will come to Tamil Nadu on January 9th AMMK will urgently convene a general committee What is the decision of TTV Dhinakaran
ஜனவரி 9ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஜனவரி 5ஆம் தேதி அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரன் எடுக்கும் அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், அதிமுக – பாஜக கூட்டணி தங்களுடன் இணையும் கட்சிகளை இறுதி செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. தமாகா தலைவர் ஜிகே வாசனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், பாஜக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அணிகளை மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டாலும், அதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மறுபக்கம், அண்ணாமலை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு, அவர் டிசம்பர் 23ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 24ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாகவே, ஜனவரி 5ஆம் தேதி அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமமுகவின் அடுத்தகட்ட அரசியல் திட்டம் மற்றும் கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 9ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வரக்கூடும் என்ற சூழலில், அதற்கு முன்பே அமமுக பொதுக்குழுவை டிடிவி தினகரன் கூட்டியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சமீப காலமாக நடிகர் விஜய்க்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், ஜனவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டணி பக்கம் அமமுக செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
Amit Shah will come to Tamil Nadu on January 9th AMMK will urgently convene a general committee What is the decision of TTV Dhinakaran