நெல்லையில் பாஜ பூத் கமிட்டி மாநாட்டு: நாளை தமிழகம் வரும் அமித்ஷா: பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரம்..!
Amit Shah to visit Tamil Nadu tomorrow to participate in BJP Booth Committee conference in Nellai
நெல்லையில் நாளை (22ம் தேதி) நடக்கும் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நெல்லை வரவுள்ளார். பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஏற்கெனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கி முதன் முதலாக தேர்தல் பணியை தொடங்கியது. அதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவும் சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்கும் வகையில்,மண்டலம் வாரியாக பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக நெல்லையில் நாளை (22ம் தேதி) மாலை பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 05 மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பாஜ நிர்வாகிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நாளை காலை 10:45 மணிக்கு கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயார்டி ஹோட்டலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா, தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பாலாரி வட்டம், ரெனை கொச்சின் ஹோட்டலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

கேரள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பிற்பகல் 02 மணிக்கு கொச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் தமிழகத்திக்கு வருகை தரவுள்ளார். 02.50-க்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடையும் அவர், மாலை 03.10 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடைக்கு சென்றடையவுள்ளார்.
அதன் பின்னர், மாலை 03.25 மணிக்கு நெல்லை தச்சநல்லூர், பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார்.பின்னர், மாலை 04.55 மணிக்கு நெல்லை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 05.15 மணிக்கு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு புறப்படவுள்ளார். அதன் பின்னர் மாலை 05:35 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி புறப்படவுள்ளார்.
English Summary
Amit Shah to visit Tamil Nadu tomorrow to participate in BJP Booth Committee conference in Nellai