தமிழக அரசியல் களத்தில் கூட்டணி அதிர்வுகள்..! அமித்ஷா-எடப்பாடி சந்திப்புக்குப் பின் டிடிவிக்கு ‘கிரீன் சிக்னல்’, ஓபிஎஸ்க்கு ‘நோ’...!
Alliance tremors Tamil Nadu political arena After Amit Shah Edappadi meeting TTV gets green signal but OPS gets no
வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், அரசியல் களத்தை நாளுக்கு நாள் பரபரப்பாக்கி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகியவற்றுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது டெல்லியை மையமாகக் கொண்டு தீவிரமடைந்துள்ளன.
சமீபத்தில் புதுக்கோட்டைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, அமித்ஷாவை நேரில் சந்திக்கவில்லை.

இதற்குப் பதிலாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இருமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.அந்த சந்திப்புகளில், சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலை, பெயர்களுடன் அமித்ஷா வழங்கியதாகவும், 50-க்கும் மேற்பட்ட தொகுதிகள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், திமுகவை தோற்கடிக்க அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் அமித்ஷா வழங்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில், டெல்லி திரும்பிய அமித்ஷாவை, நேற்று இரவு அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்,“டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைப்பீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர்,“தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும். அதைப் பற்றி இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது.
சேரும்போது உங்களை அழைத்து அறிவிப்போம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை”என்று திட்டவட்டமாக பதிலளித்தார்.எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு, டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பதற்கான சம்மதம் வழங்கப்பட்டதாகவே அரசியல் வட்டாரங்களில்க கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.இதற்கு முன்பு, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் சேரமாட்டேன் என கூறி வந்த டிடிவி தினகரன், சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில்,“தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்பதெல்லாம் எனக்கு தெரியாது”என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Alliance tremors Tamil Nadu political arena After Amit Shah Edappadi meeting TTV gets green signal but OPS gets no