சட்டப்பேரவையில் சபாநாயகர் செயல்பாடு கவனம்! எந்த பக்கமும் சாயாத JCD பிரபாகர்! ஆதாரம் இல்லாம பேசாதீங்க!கோபத்தில் தவெக தலைகள்!
All eyes on the Speaker conduct in the Assembly JCD Prabhakar remains neutral siding with neither camp Donot speak without evidence TVK leaders are furious
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களின்போது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் செயல்பாடு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவையை நடுநிலையுடன் வழிநடத்த முயன்றதாக எதிர்க்கட்சிகள் பாராட்டி வரும் நிலையில், ஆளுங்கட்சியின் சில தரப்பினரிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, “ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. எந்த ஊர், எந்த காவல் நிலையம், எந்த வழக்கு என்பதை குறிப்பிட்டு பேசுங்கள்” என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “நாளை ஆதாரங்களுடன் வருகிறேன்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அவையில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றது.
மேலும், சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தொடர்பான அரசு நிகழ்ச்சி சர்ச்சையையும் சபாநாயகர் அவையில் குறிப்பிட்டார். ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், மத்திய அரசை விமர்சித்து அமைச்சர் வன்னி அரசு பேசியபோதும் சில கட்டுப்பாடுகளை சபாநாயகர் விதித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, முன்னாள் சபாநாயகர் க. ராஜாராம் பின்பற்றிய நடுநிலை அணுகுமுறையை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட விரும்புவதாக ஜேசிடி பிரபாகர் கூறியதாகவும், அதுகுறித்து முதல்வர் விஜயுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும் பேசப்படுகிறது. எனினும், இந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
மறுபுறம், ஆளுங்கட்சியின் சில அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், அமைச்சர்களின் பேச்சுகளுக்கு சபாநாயகர் கட்டுப்பாடுகள் விதிப்பது அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்துவதாக கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிருப்தி கட்சித் தலைமையிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மாறாக, எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் செயல்பாட்டை வரவேற்று, அவையை பாகுபாடின்றி நடத்தும் அணுகுமுறை ஜனநாயக மரபுகளுக்கு உகந்தது என்று கருத்து தெரிவித்துள்ளன.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் இந்த அணுகுமுறை தொடர்ந்து நீடிக்குமா, அல்லது ஆளுங்கட்சிக்குள் கூறப்படும் அதிருப்தி எதிர்காலத்தில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் தெளிவாகும்.
English Summary
All eyes on the Speaker conduct in the Assembly JCD Prabhakar remains neutral siding with neither camp Donot speak without evidence TVK leaders are furious