கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ள தூத்துக்குடி தவெக ஆதரவாளர் அஜிதா ஆக்னல்..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி வழியாக சென்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே நேரத்தில் தவெக உறுப்பினராக பரபரப்பை ஏற்படுத்திய அஜிதா ஆக்னல் தற்போது திமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தவெகவில் உறுப்பினராக இருந்தவர் அஜிதா ஆக்னல். கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி தவெக மாவட்டச் செயலாளர் நியமனம் நடைபெற்றது.

அப்போது தனக்கு தவெகவில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த அவர், சென்னை பனையூர் அலுவலகம் வந்திருந்தார். ஆனால், மாவட்டச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் தனது பெயர் இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட அஜிதா விஜய்யை சந்தித்து முறையிட முயன்றார். அப்போது அது முடியாமல் போனது. இதனால் விரக்தியடைந்த அஜிதா, அலுவலகத்திற்கு விஜய் வந்த போது, அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஜய்யின் காரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து அஜிதா தற்கொலை முயற்சி செய்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், அப்போதும் தவெக தலைவர் விஜய் உட்பட முக்கிய நிர்வாகிகள் அவரைச் சந்தித்தோ அல்லது அவரிடமோ பேசி ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயர் வரும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், மீண்டும் அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று தவெக தலைவர் விஜய், தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை வழியாக கன்னியாகுமரி சென்று அங்கு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தூத்துக்குடியில் விஜய் வந்தபோது அவரை வரவேற்க அஜிதா செல்லவில்லை. அதே சமயம் அவர் இன்று திமுகவில் இணைகிறார் எனும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, இன்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியை நேரில் சந்தித்து அஜிதா ஆக்னல் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரது சகோதரர் பில்லா ஜெகன் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajitha Agnel a TVK supporter from Thoothukudi has joined the DMK


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->