இன்பநிதி வரை வாரிசுகளுக்கு சலாம் போட்டு 2 தொகுதி வாங்கப் போகும் திருமாவளவன்... அதிமுக தரப்பில் கடும் பதிலடி!
AIADMK Singai Ramachandran Condemn to VCK Thirumavalavan
எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக திருமாவளவன் சொன்ன கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிமுக மாணவர் அணி தலைவர் சிங்கை இராமச்சந்திரன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "எனக்கு பின் இவர் தான் என புரட்சித்தலைவரோ புரட்சித்தலைவியோ யாரையும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காட்டவில்லை திருமாவளவன் அவர்களே,
ஜனநாயக வழியில், புரட்சித்தலைவருக்கு பின் தனது திறமையான ஆளுமையான தலைவி என தொண்டர்களாலும் மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுதான் அம்மா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார்.
அதிமுக என்பது நான், எனக்கு பின் என் மகன், அவனுக்கு பின் அவன் மகன் என 4 தலைமுறைகளுக்கு ஒரு குடும்பத்தையே அடையாளம் காட்டி அவர்களுக்கு பரம்பரை அடிமையாக இருக்கும் கட்சி அல்ல,
எது பார்ப்பனியம்?
2001-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பொதுத்தொகுதியான திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் “தலித் எழில்மலை” அவர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
நீங்கள் எல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படாதீர்கள் என்று விசிகவிடம் சொன்ன திரு. கருணாநிதிக்கு பெயர் என்ன?
பெரம்பலூர் பொதுத்தொகுதி ஆனவுடன் அதில் போட்டியிட்ட ஆ.ராசாவை நீலகிரி தனித்தொகுதிக்கு விரட்டியதற்கு பெயர் என்ன?
தான் ஒரு கவுல் பிராமணன் என்று சொன்ன ராகுல் காந்தியோடும் வாரிசு அரசியல் கட்சியான திமுகவோடு கூட்டணி வைத்து இருப்பது பார்ப்பனியம் இல்லையா?
அரசியலமைப்பு தந்த 50% சதவீத அளவையும் தாண்டி இட ஒதுக்கீட்டை 68% சதவீதம் ஆக்கி சமூக நீதியை நிறுவியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆர் அவர்கள்,
அதை நீதிமன்றத்தில் ரத்து செய்து விடாமல் 9 - ஆவது அட்டவணையில் சேர்த்து பாதுகாத்ததால் “சமூக நீதி காத்த வீராங்கனை” என பாராட்டப்பெற்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,
எங்கள் கட்சியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை, தானும் எழுந்து வணக்கம் செலுத்தும் விதமாக சட்டசபையில் அவைத் தலைவராக ஆணை பிறப்பிக்க வைத்தவர் புரட்சித்தலைவி,
பரம்பரையாக வந்த கர்ணம் பதவிகளைக் கூட ஒழித்து தகுதி அடிப்படையில் விஏஓ பதவிகளை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்,
இதுவரையில் சமூக நீதிக்காக திருமாவளவன் செய்த சாதனை என்ன?
யாரைப் பற்றி யார் பேசுவது?
திமுக ஆட்சி என்பதால் தொடரும் சாதியக் கொலைகளை எதிர்த்து வீரியமாக பேசக் கூட அஞ்சுகிறார்.
திமுக தலைவராக ஆ.ராசா வர முடியுமா என திருமாவளவன் கேட்பாரா?
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வரை வாரிசுகளுக்கு சலாம் போட்டு 2 தொகுதி வாங்கப் போகும் திருமாவளவன் எம்.ஜி.ஆர், அம்மா பற்றி இப்படி பேசலாமா?
சாதியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு, சமூக நீதிக்காக உழைத்த மக்கள் தலைவர்களை இப்படி அடையாளப்படுத்திப் பேச கூச்சமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
AIADMK Singai Ramachandran Condemn to VCK Thirumavalavan