மீசையை பற்றி ஒட்டுமுடிகள் பேசலாமா? திமுகவுக்கு அதிமுக பதிலடி!!
AIADMK response to DMK comment on EPS
நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப அணியின் ட்விட்டர் பக்கத்தில் "ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதா?

1. எந்த ஊழல் குற்றச்சாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது?
2. அந்த ஊழல் குற்றச்சாட்டு எந்த நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது?
3. அதிமுக தலைமையின் ஊழலை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா போல, திமுகவின் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதி யார்?
கூவத்தூரில் டேபிளுக்கு அடியில் மீசையைத் தொலைக்காத நபராக இருந்தால் பழனிச்சாமி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்!" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மீசை இல்லாத புகைப்படம் திமுக தரப்பிலிருந்து பகிரப்பட்டது.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்த நிலையில் கோவை மண்டல அதிமுக ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "மீசையை பற்றி ஒட்டுமுடிகள் பேசலாமா? ஊழலால் ஆட்சி கலைக்கப்பட்ட திமுகவை ஒதுக்கி, புரட்சித்தலைவரை நிரந்தர முதல்வராக்கியதே மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு என்பது ஊர் அறிந்த உண்மை.
அதே காங்கிரஸ்-க்கு அப்பா அடிமையாக இருந்ததும் மகள் திகாருக்கு போனதும் மகன் இன்று காவிரி உரிமையை விற்பதுமே பரம்பரை ஊழலுக்கான சாட்சி!" என முன்னாள் முதல்வர் கருணாநிதி "நாங்கள் அடிமையாக இருக்கிறோம்" என பேசிய வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
AIADMK response to DMK comment on EPS