வரலாறே இல்லாதவர்கள் இதை பற்றி பேசக்கூடாது! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் பதிலடி!
AIADMK RBUdayakumar response to annamalai comments
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த கூட்டணி முறிவை அதிமுக தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனங்களுக்கு பாஜக திறப்பிலிருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர் "1920 முதல் 2023 வரை பல்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. அதிமுக ஆரம்பித்த 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. தேசிய கட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. ஜனாதிபதி ஆட்சி கூட தமிழகத்தில் இருந்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்கள் வரலாற்று பின்னணி கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வலது புறத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், இடதுபுறத்தில் ஜெ.பி நாட்டாவும் அமர்ந்திருந்தார்கள். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் பெற முடியாத முக்கியத்துவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெற்றுள்ளார்.

எல்லா கூட்டணியிலும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இந்தியா கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தேர்தல் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அனைத்து முன்னாள் அமைச்சர்களையும் அருகில் வைத்துக் கொண்டு 9 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. மீண்டும் அவர் பாரத பிரதமராக வரவேண்டும் என பேட்டியளித்தார்.
தமிழக மக்களும் இந்திய பிரதமராக மோடியும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பும் எண்ணமும். திமுக அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் இருந்து அகற்ற தேட வேண்டிய சக்தி திராவிட முன்னேற்ற கழகம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த குறைபாடும் வந்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்று பட்டியலில் இடம்பெறாத, வரலாறே இல்லாதவர்கள் வரலாற்றைப் பற்றி பேசும்போது தான் சர்ச்சை ஏற்படுகிறது. வரலாற்றை எல்லாரும் படித்திருப்பார்கள். தேவையானதை மட்டும் படித்து தேவையானதை மட்டுமே சொல்வார்கள்.
எனவே தேவையில்லாத வரலாறுகளை வரலாறு இல்லாதவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு என்பது போல எல்லாரும் மறந்து விடுவார்கள். தலைவராக வர நினைப்பவர்களும், தலைமை தாங்க வருபவர்களும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
English Summary
AIADMK RBUdayakumar response to annamalai comments