கவுண்டமணி குறித்து பிரபல நடிகை ஓபனாக சொல்லிட்டாங்களே.. என்ன சொன்னாங்க தெரியுமா? - Seithipunal
Seithipunal


கோலிவுட் திரை வரலாற்றில் கவுண்டமணி ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. அவரது தனித்துவமான டைமிங் காமெடி, கவுண்டர் வசனங்கள் மற்றும் உடனடி எதிர்வினைகள் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பாதையை முற்றிலும் மாற்றின. அதனால்தான் அவருக்குப் பின்னர் வந்த பல காமெடி நடிகர்கள் கவுண்டமணியின் ஸ்டைலைப் பின்பற்றும் நிலை உருவானது. வயோதிகம் காரணமாக தற்போது சினிமாவிலிருந்து விலகி இருந்தாலும், திரைத்துறையில் நெருக்கமானவர்கள் உயிரிழந்தால் நேரில் சென்று துக்கம் விசாரிப்பதை அவர் இன்றும் கடமையாகக் கொண்டிருக்கிறார்.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த கவுண்டமணி, முதலில் நாடக மேடைகளில் தனது பயணத்தைத் தொடங்கினார். மேடையில் யார் என்ன பேசினாலும் சளைக்காமல், அதிரடியான டைமிங் கவுண்ட்டர்களை வழங்கியதால்தான் அவர் “கவுண்டமணி” என்ற பெயரால் பிரபலமானார். பின்னர் சினிமாவில் கால்பதித்த அவர், தனது நகைச்சுவை திறமையால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.

அந்த நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய துணைத் தூணாக இருந்தவர் நடிகர் செந்தில். கவுண்டமணி–செந்தில் ஜோடி இணைந்து 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது. ஒரு காலத்தில் அவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே அந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவியது. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு வகையான காமெடியை முயற்சித்து, இருவரும் கடுமையாக உழைத்தனர்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியபோது, கவுண்டமணி மரியாதையாக சினிமாவிலிருந்து விலகினார். இடையில் 49 ஓ, ஒத்த ஓட்டு முத்தையா போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார். அவர் திரையிலிருந்து ஒதுங்கினாலும், அவரது நகைச்சுவை பாணி இன்றும் பல நடிகர்களின் நடிப்பில் பிரதிபலிக்கிறது. சந்தானம் உள்ளிட்ட புதிய தலைமுறை காமெடி நடிகர்களின் பாணியில் கவுண்டமணியின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சுகன்யா சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கவுண்டமணி குறித்து பகிர்ந்த கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் கூறுகையில், “என் அப்பா தயாரித்த படத்தில் கவுண்டமணிதான் ஹீரோவாக நடித்தார். அந்த சமயத்தில் நான் சினிமாவில் புதிதாக அறிமுகமாகியிருந்தேன். ஏற்கனவே பழக்கம் இருந்ததால், ‘வாம்மா, போம்மா’ என்று அன்போடும் உரிமையோடும் பேசுவார். நாம் திரையில் பார்ப்பது போல அவர் இல்லை. அபாரமான அறிவு கொண்டவர். நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். இந்தப் படத்தை பார், அந்தப் படத்தை பார், உனக்கு உபயோகமாக இருக்கும் என்று எனக்கும் சொல்லுவார். ரொம்பவே அறிவான மனிதர்” என்று தெரிவித்துள்ளார்.

திரையில் சிரிப்பை வழங்கிய கவுண்டமணி, திரைக்கு அப்பால் அறிவும், மனிதநேயமும் கொண்ட ஒரு தனித்துவமான ஆளுமை என்பதையே சுகன்யாவின் இந்த நினைவுகள் வெளிப்படுத்துகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The famous actress spoke openly about Goundamani Do you know what she said


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->