சுனாமியையும் தடுத்த திருச்செந்தூர்:சுனாமியில் சிக்காத முருகன் கோயில்.. திருச்செந்தூரில் நடந்த அதிசயம்.. மெய்சிலிர்க்கும் காரணம்!
Tiruchendur which prevented the tsunami The Murugan temple that was not caught in the tsunami The miracle that happened in Tiruchendur
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் கடல் நீரில் மூழ்கி, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த அந்த கொடூர நாளை உலகமே மறக்க முடியாது. ஆனால், கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பியது இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
அன்றைய தினம், பல பகுதிகளில் கடல் அலைகள் சீறி நிலத்தை நோக்கி பாய்ந்த நிலையில், திருச்செந்தூரில் மட்டும் கடல் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த அபூர்வ நிகழ்விற்கு ஆன்மீக காரணங்களும், அறிவியல் விளக்கங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஆன்மீக ரீதியில், திருச்செந்தூர் திருப்புகழ் பாடல்களை மேற்கோள் காட்டி பக்தர்கள் விளக்கம் அளிக்கின்றனர். சூரபத்மன் கடலுக்கடியில் மாமரமாக மறைந்தபோது, முருகப்பெருமான் வடிவேலை எறிந்து அவனை வதம் செய்ததாகவும், அதனால் கடல் நீரே பயந்து பதுங்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வருண பகவான், “உமது இருப்பிட எல்லையை நான் ஒருபோதும் கடக்கமாட்டேன்” என்று முருகப்பெருமானுக்கு வாக்குறுதி அளித்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே கடல் அலைகள் கோயிலை நெருங்கவில்லை என்றும், அதனால் தான் முருகனை பக்தர்கள் “கடல் காத்த கந்தன்” என்று அழைக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அறிவியல் ரீதியாகவும் இதற்கு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. திருச்செந்தூர் கோயில் அமைந்துள்ள கடற்கரை பகுதி மெதுவான சரிவுடன் இருப்பதால், சுனாமி அலைகள் அந்த இடத்தை அடையும் போது அவற்றின் வேகமும் உயரமும் குறைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் கடலின் அடிப்பகுதி திடீரென ஆழமோ உயரமோ மாறாமல் சமமாக இருப்பதால், அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
கோயிலின் முன்புறத்தில் இருந்த பாறைகள், மணல் மேடுகள் போன்ற இயற்கை தடுப்புகளும், அலைகளின் சக்தியை குறைத்தன. அதோடு, கோயில் ஒரு வலுவான பாறைப் படுகையின் மீது கட்டப்பட்டிருப்பதும், சுனாமி தாக்கத்தை எதிர்கொள்ள ஒரு இயற்கை அரணாக செயல்பட்டதாக நிபுணர்கள் விளக்குகின்றனர். மேலும், 2004-ல் உருவான சுனாமி அலைகளின் பிரதான தாக்கப் பாதையில் திருச்செந்தூர் இல்லை என்பதும் ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது.
ஆன்மீக நம்பிக்கையோ அல்லது இயற்கையின் அமைப்போ, எது காரணமாக இருந்தாலும், 2004 சுனாமியில் திருச்செந்தூர் முருகன் கோயில் தப்பிய நிகழ்வு இன்றளவும் மக்களின் மனதில் ஒரு அதிசயமாகவே நிலைத்திருக்கிறது.
English Summary
Tiruchendur which prevented the tsunami The Murugan temple that was not caught in the tsunami The miracle that happened in Tiruchendur