மதுரையில் கூட்டணி ஆலோசனை! தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்...! - டெல்லி புறப்படும் எடப்பாடி பழனிசாமி
Alliance meeting Madurai Seat sharing talks full swing Edappadi Palaniswami Delhi
மதுரை நகரில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் அரசியல் வெப்பத்தை கிளப்பிய நிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்று தங்கள் சக்தியை வெளிப்படுத்தினர்.

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும், எடப்பாடி பழனிசாமி தலைமையில்,தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி பியூஷ் கோயல், மத்திய இணை மந்திரி எல். முருகன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தனியார் ஓட்டலில் தனிப்பட்ட ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க. தரப்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அதில் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் பல தொகுதிகள் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளாக இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில முக்கிய தொகுதிகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Alliance meeting Madurai Seat sharing talks full swing Edappadi Palaniswami Delhi