அதிமுகவில் ராஜ்யசபா சீட்டு கேட்ட ஆதவ் அர்ஜுன..எடப்பாடி சொன்ன அந்த வார்த்தை! இதனால்தான் தவெகவில் இணைந்தாரா?
Adhav Arjuna who asked for a Rajya Sabha ticket from AIADMK that word he said to Edappadi Is this why he joined the Tvk
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பல மாதங்கள் ஆன நிலையில், அதற்கு முன்பாக அவர் அதிமுகவில் சேர தீவிர முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மூலம் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் தோல்வியடைந்ததால்தான் அவர் தவெகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அதிமுக ஈடுபட்டு வந்த சூழலில், 2024 இறுதியில் விசிகவிலிருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, முதலில் அதிமுகவையே தனது அரசியல் தளமாக தேர்வு செய்ய முயன்றார். திமுகவுக்கான தேர்தல் வியூகங்களில் முக்கிய பங்கு வகித்தவர், பின்னர் விசிகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் பெற்றிருந்தார். ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிமுகவில் அவர் இணையப்போகிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது அதிகாரப்பூர்வ இணைப்பு நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென விஜயை சந்தித்து சில நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கான பின்னணி குறித்து அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஆதவ் அர்ஜுனா மாநில அளவிலான முக்கிய பொறுப்பை கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் 2024 மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்ற ஆதவின் கோரிக்கையை எடப்பாடி ஏற்க மறுத்ததாகவும், சேர்ந்த உடனே ராஜ்யசபா சீட் வழங்குவது கட்சிக்குள் சீனியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு இடமில்லை என திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிவித்தனர்.
லோக்சபா சீட் வழங்க தயாராக இருப்பதாக எடப்பாடி கூறியபோதும், போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க முடியாது என்றும், ராஜ்யசபா சீட் மட்டுமே வேண்டும் என்றும் ஆதவ் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து அதிருப்தியடைந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை விட்டு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Adhav Arjuna who asked for a Rajya Sabha ticket from AIADMK that word he said to Edappadi Is this why he joined the Tvk