அதிமுகவில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பா? முனுசாமியை விட்டு ஆழம் பார்த்த எடப்பாடி! ஏக கடுப்பில் அதிமுக தலைகள்!
A key role for Mithun in the AIADMK Edappadi tested the waters through Munusamy
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை முன்னெடுக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவது குறித்து அவர் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் அவரது மகன் மிதுனை கட்சிப் பொறுப்புக்கு கொண்டு வரும் திட்டம் இருக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மூத்த தலைவர் கே.பி. முனுசாமி, "கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் கட்சியில் பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது" என்று பேசியதாக தகவல்கள் வெளியாகின. அந்தக் கருத்துக்கு சில நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் வெளியில் பேசப்பட்டதைத் தொடர்ந்து, வாரிசு அரசியலை எதிர்த்து உருவான இயக்கத்தில் இதுவரை எந்தக் கட்சிப் பொறுப்பிலும் இல்லாத ஒருவரை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று அதிமுகவின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி பொதுவெளியில், "எனது மகன் கட்சிப் பதவிக்கு வரமாட்டார்" என்று கூறி அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
ஆனால், தற்போது மீண்டும் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவது குறித்து நிர்வாகிகளிடம் தொடர்ந்து கருத்து கேட்டு வருவது, மிதுனை எதிர்காலத்தில் கட்சிக்குள் அறிமுகப்படுத்துவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்ற கருத்து சில அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவில் மாற்றங்கள் செய்ய எடப்பாடி பழனிசாமி விருப்பம் கொண்டுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் ஐடி விங் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் ஏற்கனவே முன்வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பொறுப்பில் இருந்த சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் கட்சி நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்காத சூழல் நிலவுவதாகவும், இந்த அரசியல் சூழலில் புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்துவதற்கான வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், மிதுனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்படுவது தொடர்பாக அதிமுக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
A key role for Mithun in the AIADMK Edappadi tested the waters through Munusamy