10கி.மீ.க்கு ஒரு தடுப்பணை! ஏறி குளங்களை தூர்வாரினால் போதும்! 150 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்! அரசுக்கு யோசனை சொன்ன சௌமியா! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, வேளாண்மை, விவசாயிகள் வருமானம், வேலைவாய்ப்பு, நீர்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக, குடும்ப பட்ஜெட்டை உதாரணமாகக் கூறி விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்து அவர் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

சட்டப்பேரவையில் பேசிய சௌமியா அன்புமணி, சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக அரசு எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். மேலும், கூட்டுறவு கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ள நிலையில், வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடும்பத்தை நடத்தும் பெண்களின் நிலையை உதாரணமாகக் கூறிய சௌமியா அன்புமணி, வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மளிகைச் செலவு, குழந்தைகளின் கல்விக் கட்டணம், இஎம்ஐ என பல்வேறு செலவுகளைக் கணக்கிட்டு குடும்ப பட்ஜெட்டை பெண்கள் தயாரிப்பதாக தெரிவித்தார்.

அப்போது, “தாய்மாமன் சீரை முதல்வர் விஜய் கொடுத்துவிடுவார். ஆனால் அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம் யார் கொடுப்பது? இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் ஒரு குடும்பத் தலைவி பட்ஜெட் போடுவார்” என்ற வகையில் அவர் பேசிய கருத்து கவனம் பெற்றது.

விவசாயிகளுக்கு மாற்று வருவாய் ஏற்படுத்துவதற்கான முழுமையான திட்டங்கள் தேவை என்றும், பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். மேலும், அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் ஒழித்து, நீண்ட காலமாக தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் அவர் விரிவாக பேசினார். தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், சில ஆயிரம் அரசு பணிகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எழுதும் நிலை மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நீர்வளத்தை பாதுகாப்பதற்கான திட்டங்களையும் அவர் முன்வைத்தார். மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும் என்றும், ஏரி, குளங்களை முறையாக தூர்வாருவதன் மூலமும் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும் என்றும் சௌமியா அன்புமணி கூறினார்.

“நமக்கு பெய்யும் மழைநீரை நாமே சேமித்து வைத்துக்கொண்டால், காவிரிக்காக கர்நாடகாவிடமும், முல்லைப் பெரியாறுக்காக கேரளாவிடமும், கிருஷ்ணா-கோதாவரிக்காக ஆந்திராவிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது” என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

மேலும், ஏரிகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டால் விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும் என்றும், அதன் மூலம் விவசாயத்தை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற நீர்வளத் திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என தான் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து, ஒரு அமைப்பை மாற்றுவது எவ்வளவு கடினமானது என்பதற்கு தனது கணவர் அன்புமணியின் அரசியல் செயல்பாடுகளை உதாரணமாகக் குறிப்பிட்ட சௌமியா அன்புமணி, பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற சுகாதாரம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக்காட்டினார்.

மொத்தத்தில், விவசாயிகளின் வருமானம், கடன் தள்ளுபடி, பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நீர்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A check dam every 10 km 150 TMC of water could be stored Sowmya offers a suggestion to the government


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->