அறுபடை வீடுகள் உட்பட 52 முதுநிலைக் கோயில்களில் செல்போனுக்கு தடை; கேமரா இல்லாத போன்களுக்கு அனுமதி..!
52 Senior Temples allow phones without cameras
தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகள் உட்பட 52 முதுநிலைக் கோயில்களில், செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரி, மதுரை மீனாட்சி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சுசீந்திரம் தாணுமாலயன், அழகர்கோவில் கள்ளழகர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி முருகன் உள்ளிட்ட 52 கோயில்கள் அடங்கும்.
இந்தக் கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக 'செல்போன் பாதுகாப்பகங்கள்' அமைக்கப்பட்டுள்ளன. அதற்குக் கட்டணமாக ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தடையை மீறி கோயிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது உடனடியாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவற்றை கண்காணிக்கத் தவறும் கோயில் அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு 52 கோவில்களில் செல்போன் தடை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசிக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இறைவனின் திருவுருவங்களை வீடியோ எடுப்பதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை.
எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய செல்போன்களை வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம், புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண செல்போன்களைக் கோயிலுக்குள் கொண்டு செல்லத் தடையில்லை.''என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
52 Senior Temples allow phones without cameras