“ஹீரோவாகும் எளிய வழியை தேர்வு செய்யவில்லை” – ஜேசன் சஞ்சய் குறித்து சிக்மா ஹீரோ சந்தீப் கிஷன் ஓபன் டாக்!
He didnot choose the easy path to becoming a hero Michael star Sundeep Kishan speaks candidly about Jason Sanjay
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு தற்போது புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் அளித்த பேட்டியில், இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
‘சிக்மா’ படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் ஹைதராபாத்தில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் தன்னிடம் விவரித்ததாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், தன்னை ஹீரோவாக தேர்வு செய்ததற்கான காரணத்தை கேட்டபோது, தான் நடித்த ஒவ்வொரு படத்தையும் குறிப்பிட்டு ஜேசன் பாராட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், படத்தை தொடங்கியதில் இருந்து ஜேசனுக்கு பல்வேறு சவால்கள் இருந்ததாகவும், அவற்றை அவர் வெளியில் பெரிதாக பேசவில்லை என்றும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். “ஜேசனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. படம் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை அவருக்கு கஷ்டம்தான். பிரச்னைகள் வரும் என்று தெரிந்தே இயக்குநர் பொறுப்பை அவர் தேர்வு செய்தார்” என சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் நினைத்திருந்தால் ஹீரோவாக நடிப்பதன் மூலம் எளிதான பாதையை தேர்வு செய்திருக்கலாம் என்றும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். அவரது பின்னணி காரணமாக பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்க முன்வந்திருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், “முதலில் இயக்குநராகத்தான் ஆக வேண்டும்” என்பதில் ஜேசன் சஞ்சய் தெளிவாக இருந்ததாக சந்தீப் கிஷன் குறிப்பிட்டுள்ளார். ஒரு புதுமுக ஹீரோவாக அறிமுகமாகி மிகப்பெரிய ஓப்பனிங் கொடுக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும், அவர் அந்த வழியை தேர்வு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்குள் நல்ல நட்பு உருவானதாக கூறிய சந்தீப் கிஷன், ஜேசனுக்கு படத்தில் என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவான பார்வை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் எதிர்பார்த்ததை திரையில் கொண்டு வருவது தனக்கு எளிதாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், முதல் படத்தை இயக்கும்போது அனைவரது பார்வையும் தன் மீது இருக்கும் என்பதை ஜேசன் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்ததாகவும், தான் கற்பனை செய்ததை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வருவதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
இதனால், விஜய்யின் மகன் என்ற அடையாளத்தை பயன்படுத்தி ஹீரோவாக அறிமுகமாவதை விட, இயக்குநராக தனது முதல் படியை எடுத்து வைத்த ஜேசன் சஞ்சயின் அணுகுமுறை தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி ‘சிக்மா’ வெளியாக உள்ள நிலையில், படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
English Summary
He didnot choose the easy path to becoming a hero Michael star Sundeep Kishan speaks candidly about Jason Sanjay