திமுக கூட்டணியில் 5 தொகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்பதா...? - மார்க்சிஸ்ட் கட்சி இன்று முடிவு
5 Constituencies DMK Alliance Should We Accept Chief Minister Stalin Proposal Marxist Party Decide Today
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளையாவது கேட்டுப் பெறுவது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, திமுகவுடனான 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் குழு அண்ணா அறிவாலயம் சென்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் உடன்பாடு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்தது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதி ஒதுக்கீட்டில் உள்ள சிரமங்களை முதல்வர் பகிர்ந்துகொண்டதாகவும், 5 தொகுதிகளை ஏற்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், 6 தொகுதிகளுக்கு மட்டுமே மாநிலக்குழு ஒப்புதல் அளித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் பேசுகையில், "மார்க்சிஸ்ட் கட்சி இந்த கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறது.
கடந்த முறை எங்களது பலமுள்ள மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால்தான் வெற்றி பெற முடியவில்லை. எனவே, முதல்வரின் வேண்டுகோளை மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலிப்போம்.
தொகுதி எண்ணிக்கையை வைத்து கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என யோசிக்கும் கட்சி மார்க்சிஸ்ட் அல்ல. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்போம்.
உடன்பாடு ஏற்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட விருப்பமான தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்குவோம்" என்றார்.இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (மார்ச் 23) கூடுகிறது.
இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், திமுகவுடனான பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் இன்று இறுதி செய்யப்படும் என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
5 Constituencies DMK Alliance Should We Accept Chief Minister Stalin Proposal Marxist Party Decide Today