கடலூர் விபத்தில் 4 பேர் பலி...! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்...! - முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
4 people died Cuddalore accident 3 lakh compensation each families deceased Chief Minister Vijay orders action
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பணிக்கன்குப்பம் கிராமம் அருகே, கும்பகோணம் சாலையில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை, மருங்கூர் கிராமத்திலிருந்து முந்திரிக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு பண்ருட்டி நோக்கிச் சென்ற டிராக்டரின் பின்புறத்தில், அதே திசையில் வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷின் மனைவி சத்யா (31), சாமிநாதனின் மனைவி செல்வராணி (58), கீழூர் மதுரா ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணியின் மனைவி காந்திமதி (60), ராசாக்கண்ணுவின் மகன் ரவிச்சந்திரன் (58) ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களால் உயிரிழந்தனர்.
இந்த துயரச் செய்தி மிகுந்த மனவேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த உக்கரவேல் (48), சந்தோஷ் (37), தேவகி (50), அஞ்சலை (60), சதீஷ் (35), விஜயா (35), சந்திரகுமார் (35) ஆகிய ஏழு பேருக்கும் உடனடி மற்றும் உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மாவாசை (50) என்பவருக்கும் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் முழுமையாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஏழு பேருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயங்களுடன் சிகிச்சையில் இருக்கும் ஒருவருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மருத்துவ உதவிகளும், தேவையான அரசின் அனைத்து ஆதரவு நடவடிக்கைகளும் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
4 people died Cuddalore accident 3 lakh compensation each families deceased Chief Minister Vijay orders action