தலைமை செயலகத்தில் அமைச்சர் புஸ்சி ஆனந்தை திடீரென சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர்; தவெகவிற்கு தாவும் எண்ணமா..?
3 AIADMK MLAs suddenly met Minister pussi Anand at the Secretariat
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 06) தாக்கல் செய்து, உரை நிகழ்த்தினார். பட்ஜெட் வாசித்து முடிந்த உடன் கூட்டம் முடிவடைந்தது. அப்போது அதிமுகவில் அதிருப்தி உள்ள எம்எல்ஏக்கள் ஆன எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் சட்டப் பேரவை வளாகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்து பேசினர்.
அதன் பின்னர் குறித்த 03 எம்எல்ஏக்களும் புஸ்சி ஆனந்த் அறைக்கு சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் என்ன பிரச்னை குறித்து பேசினார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

சட்டப் பேரவை தேர்தல் முடிந்ததும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வந்தனர். பின்னர் திடீரென மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். ஆனால், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 05 எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
இருப்பினும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏ பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல், அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், அவர்கள் தவெகவில் இணையவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.அதாவது தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? அப்படியே வெற்றி பெற்றாலும் தவெகவில் அமைச்சர் பதவி கிடைக்குமா? என்று யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அதிருப்தியில் உள்ள 03 அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர் புஸ்சி ஆனந்தை சந்தித்தது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அதேநேரம் சட்டசபையில் தங்களுக்கு தனியாக இருக்கை வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
3 AIADMK MLAs suddenly met Minister pussi Anand at the Secretariat