234 தொகுதிகளுக்கு 234 மாவட்டச் செயலாளர்கள்? தவெக நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்! விஜய் எடுக்கும் புதிய வியூகம்!பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைப்பு கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் புதிய நிர்வாக மாற்றத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மொத்தம் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் திட்டம் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற முதல் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மெகா திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தவெகவில் மாநிலம் முழுவதும் 132 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்த எண்ணிக்கையை 234 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்” என்ற புதிய அணுகுமுறையின் மூலம், அந்தந்தப் பகுதிகளில் மக்களுடன் நேரடி தொடர்பை அதிகரிக்கவும், உள்ளூர் பிரச்சினைகளை விரைவாக கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்லவும் முடியும் என கட்சி தலைமை கருதுகிறது.

மேலும், தற்போதைய தவெக சட்டமன்ற உறுப்பினர்களில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு இல்லாதவர்களுக்கு, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், எம்.எல்.ஏ.க்கள் கட்சிப் பணிகளையும், தொகுதி வளர்ச்சிப் பணிகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பிற அரசியல் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செல்வாக்கு மிக்க பிரமுகர்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது கட்சியின் அமைப்பு விரிவாக்கத்தை வேகப்படுத்துவதோடு, பிற கட்சிகளின் அடித்தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை ஒரே கட்டமாக செயல்படுத்தாமல், கட்டம் கட்டமாக அமல்படுத்த தவெக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, கட்சி அமைப்பு சற்றே பலவீனமாக உள்ளதாக கருதப்படும் 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த 9 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், 234 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இறுதி அறிவிப்புகள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சியின் உட்கட்டமைப்பை தொகுதி வாரியாக மறுசீரமைக்கும் இந்த முயற்சி, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மற்ற முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் புதிய சவாலாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

234 District Secretaries for 234 Constituencies A Message Sent to TVK Functionaries Vijay New Strategy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->