2026 சட்டசபை தேர்தல்: ரூ.19.8 கோடி செலவு செய்த தவெக.!திமுக - அதிமுக செய்த செலவு எவ்வளவு தெரியுமா?
2026 Assembly Election TVK spent 19 crore Do you know how much DMK and AIADMK spent
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான செலவு கணக்கை தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தேர்தல் பணிகளுக்காக மொத்தம் ரூ.19.8 கோடி செலவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. திமுக ரூ.197.80 கோடியும், அதிமுக ரூ.112.40 கோடியும் செலவு செய்ததாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கட்சிகளுடன் ஒப்பிடும்போது தவெகவின் தேர்தல் செலவு கணிசமாக குறைவாக உள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டனர். சேலம் தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. தேர்தல் முடிவில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாக இந்த கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் கட்சி மேற்கொண்ட செலவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ கணக்கை தவெக பொருளாளர் வெங்கட்ராமணன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த தேர்தல் செலவு ரூ.19 கோடியே 80 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி தொகை பிரசாரத்துக்காகவே செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.19 கோடியே 40 லட்சம் பிரசார பணிகளுக்காக செலவிடப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊடக விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.6 கோடியே 30 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் வானொலி விளம்பரங்களுக்காக இந்த தொகை செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை பேரணிகளுக்காக ரூ.2 கோடியே 10 லட்சமும், பிரசாரப் பொருட்களுக்காக ரூ.40.50 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார விமானப் பயணங்களுக்காக மட்டும் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நான்கு முறை விமானப் பயணங்களுக்காக TAI Jets Pvt Ltd, Chipsan Aviation Pvt Ltd மற்றும் Fly High Global Aircraft Management Services Pvt Ltd ஆகிய நிறுவனங்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டதாக கணக்கில் கூறப்பட்டுள்ளது.
விஜய் போட்டியிட்டதாக குறிப்பிடப்படும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்காக மட்டும் சுமார் ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதவ் அர்ஜுனாவுடன் தொடர்புடைய Voice of Common Strategic Consulting Pvt Ltd நிறுவனத்துக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு என தனியாக எந்த தொகையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதனால் வேட்பாளர்கள் தங்களது பிரசார செலவுகளை தனிப்பட்ட முறையில் ஏற்றிருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் மற்றும் மெய்நிகர் பிரசாரத்துக்கான செலவுகள் இந்த கணக்கில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தவெகவிடம் ரூ.3 கோடி கையிருப்பு இருந்ததாகவும், தேர்தல் காலத்தில் ரூ.7 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்க்கும்போது, திமுக தாக்கல் செய்துள்ள ரூ.197.80 கோடி மற்றும் அதிமுக தாக்கல் செய்துள்ள ரூ.112.40 கோடி தேர்தல் செலவுடன் ஒப்பிடுகையில், தவெக தாக்கல் செய்துள்ள ரூ.19.80 கோடி செலவு கணிசமாக குறைவாக உள்ளது.
English Summary
2026 Assembly Election TVK spent 19 crore Do you know how much DMK and AIADMK spent