மதுராந்தகத்தில் மகளிர் கல்லூரி, தாராபுரத்தில் ரூ.1,439 கோடியில் கூட்டுக்குடிநீர்த் திட்டம்...! - தமிழக அரசு பிரம்மாண்ட அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.மதுராந்தகம் தொகுதியில் நீர்நிலைகளைச் சீரமைத்தல், விவசாயிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் குடிநீர், பாசனம், வீட்டுமனை, தீயணைப்பு மற்றும் நகர்ப்புற அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் விவரம் வருமாறு,"

மதுராந்தகம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

நீர்நிலைகள் சீரமைப்பு; புதிய சமுதாய நலக்கூடம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.செம்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும்.நெல்வாய் ஊராட்சியில் உள்ள மடுவைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த ரூ.1.30 கோடி ஒதுக்கப்படும்.தின்னலூர் ஊராட்சியில் ரூ.70 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்படும்.விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள்; பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்குவிவசாயிகளின் விளைபொருள்களைப் பாதுகாப்பதற்கும், கொள்முதல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மதுராந்தகம் தொகுதியில் தலா ரூ.30 லட்சம் செலவில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக மொத்தம் ரூ.1.80 கோடி செலவிடப்படும்.ஆத்தூரில் ரூ.20 கோடியில், 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வகையில் பகுதியளவு மூடப்பட்ட கிடங்கு அமைக்கப்படும்.ரூ.10 கோடியில் 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதைப் பண்ணை உருவாக்கப்படும்.

அச்சரப்பாக்கத்தில் அரசு மகளிர் கல்லூரி
மதுராந்தகம் தொகுதியில் உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், அச்சரப்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.பாலாற்றில் புதிய தடுப்பணை; 30 ஏரிகளுக்குக் கால்வாய் வசதி
பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில், பாலாற்றின் குறுக்கே படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்டத் தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்படும்.

மேலும், 1984-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சுமார் 30 கிலோமீட்டர் நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாய் தூர்வாரப்படும். இதன் மூலம் 30 ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில், கால்வாயின் கட்டமைப்புகள் படிப்படியாகச் சீரமைக்கப்படும்.

சுற்றுலாப் பூங்கா; பெண்களுக்குத் தங்கும் விடுதி

மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும்.

மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காகப் புதிய தங்கும் விடுதி கட்டப்படும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியில் அறிவுசார் மையம் அமைக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.4 கோடியில் வாரச்சந்தை உருவாக்கப்படுவதுடன், மழைநீர் வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்படும்.

 பள்ளி தரம் உயர்வு; கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம்

புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்.கருங்குழியில் ரூ.80 லட்சத்தில் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

மின்சார வசதி; ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள்

மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் ரூ.3 கோடியில் கூடுதலாக 25 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி நிறுவப்படும்.மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வீடற்ற குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும். நிரந்தரக் குடியிருப்புடன் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எளிதாகப் பயணம் செய்யவும் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தாராபுரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,455 ஊரகக் குடியிருப்புகளில், 1,223 குடியிருப்புகளுக்குக் காவிரி கூட்டுக் குடிநீர் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 1,232 குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் நோக்கில், ரூ.1,439 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள், மூலனூரின் 7 ஊராட்சிகள் மற்றும் பல்லடத்தின் 17 ஊராட்சிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும். காவிரி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

2,700 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.மேலும், தாராபுரம் வட்டம், சின்னபுத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

271 கிலோமீட்டர் நீளத்திற்குப் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படும்

திருப்பூர் மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் உள்ள மண்திட்டுகளை அகற்றி, தூர்வாரும் வகையில் 159 பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.குறிப்பாக, தாராபுரம் தொகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களில் படிந்துள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகள் அகற்றப்படும். இதன்படி, சுமார் 271 கிலோமீட்டர் நீளத்திற்குக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்

தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிகளில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, சுமார் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.மேலும், மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.

தாராபுரம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்பாடு

தாராபுரம் நகராட்சியில் குடிநீர் வசதிகளை வலுப்படுத்தவும், தூய்மையைப் பேணவும் பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ரூ.6 கோடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.ரூ.40 லட்சத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.மழைநீர் வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்படும்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1439 Crore Combined Drinking Water Project in Madhuranthakam Women College Tarapuram Tamil Nadu Government big announcement


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->