டிரம்ப்–மோடி ஒப்பந்தம்! 25% லிருந்து 18% ஆக வரிக் குறைப்பு- இந்தியாவுக்கு பெரிய வர்த்தக சலுகை
Trump Modi agreement Tax reduction from 25 to 18 major trade concession India
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த உரையாடல் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் தேவையெனில் வெனிசுலாவிலிருந்து அதிகளவில் வாங்க பிரதமர் மோடி சம்மதித்துள்ளார்.
அவருடனான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்கா–இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா விதித்து வந்த வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் பூஜ்ஜிய நிலைக்குக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட பல துறைகளில் இருந்து அதிக அளவில் பொருட்கள் வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவுடனான எங்கள் உறவு இனி மேலும் வலுவடையும். மோடியும் நானும் முடிவுகளை சாதிப்பதில் உறுதியான தலைவர்கள்,” என டிரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “என் அன்புத் தோழர் அதிபர் டிரம்ப் அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாராகும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் ஊக்கத்தை அளிக்கிறது.
இந்த முக்கியமான முடிவிற்காக 140 கோடி இந்திய மக்களின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.மேலும், “உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும், வலுவான ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்பட்டால், அது மக்களுக்கு நேரடி நன்மைகளை ஏற்படுத்தும்.
உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அதிபர் டிரம்பின் தலைமை அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும். இருநாடுகளின் கூட்டாண்மையை இதுவரை இல்லாத உயரத்துக்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Trump Modi agreement Tax reduction from 25 to 18 major trade concession India